கிரிமினல் வேட்பாளர்கள்..விபரங்களை வெளியிட 2 நாள் அவகாசம்

60

வக்கீல் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். அதில், “குற்ற வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் முறையாக அமல்படுத்தவில்லை. அதனால் இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். இவ்வழக்கில் நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், ரவீந்திரபட் மற்றும் வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினர். அப்போது கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை. இருப்பினும் அதில் வழிகாட்டு முறைகளை பின்பற்றகோரி நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்க முடியும். கிரிமினல் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட வேட்பாளர் குறித்த முழு விவரங்களையும் அந்த கட்சி தரப்பில் 48 மணி நேரத்தில் பத்திரிகை மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும். அதில் வேட்பாளர் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கியிருக்க வேண்டும். இது பொதுமக்கள் அனைவரும் பார்க்கும்படி வெளியிட வேண்டும். இதுகுறித்து மாநில அரசுகளும் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் கிரிமினல் வழக்கில் சிக்கியிருக்கும் வேட்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொள்ளலாம்.

மேலும், இதுபோன்ற வேட்பாளர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிட தேர்வு செய்யப்படுகின்றனர், வெறும் வெற்றிக்காக மட்டும் தானா என அரசியல் கட்சிகள் முழு விளக்கத்தை வெளியிட வேண்டும். வேட்பாளர்களின் நற்சான்றிதழ்கள், சாதனைகள் மற்றும் குற்றப்பின்னணிகள் ஆகியவை தொடர்பான விவரங்களை வெளியிட்ட அடுத்த 72 மணி நேரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த வழிகாட்டு முறைகளை கிரிமினல் வேட்பாளர்களோ அல்லது அவர்களது அரசியல் கட்சியோ பின்பற்ற தவறும் பட்சத்தில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்து தாமாக முன்வந்து வழக்கு தொடரலாம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY