தமிழக பாஜ புதிய தலைவர் நாளை அறிவிப்பு ?

325
Spread the love

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், கடந்த செப் 1-ம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூலை 6-ம் தேதி பாஜக உறுப்பினர் சேர்க்கையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் கடந்த அக்டோபரில் உள்கட்சித் தேர்தல் தொடங்கியது. கிளை, மண்டல தலைவர் தேர்தல் முடிந்து மாவட்டத் தலைவர் தேர்தல் நடந்துவந்தது. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கட்சித் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தல் நேற்றுடன் முடிந்து விட்டதால் பாஜக மாவட்டத் தலைவர் தேர்தலை விரைந்து முடிக்குமாறு கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் பணியை கட்சித் தலைமை தொடங்கியுள்ளது. இதற்காக கடந்த  ஜனவரி 5-ம் தேதி சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. இந்த நிலையில் தமிழக பாஜ தலைவர் அறிவிப்பு நாளை வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  முன்னாள் மாநிலத் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவர் புதிய தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY