சீனாவில் நிலக்கரி சுரங்க கோர விபத்து
சீனாவின் முன்னணி நிலக்கரி உற்பத்தி பிராந்தியமான வடக்கு ஷான்சி (Shanxi) மாகாணத்தில் உள்ள லியுஷென்யு (Liushenyu) நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வாயு வெடிப்பு (Gas Explosion) உலகையே உலுக்கியுள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் சீனா சந்தித்திராத மிக மோசமான இந்த சுரங்க விபத்தில், மீட்புப் பணியின் போது நிலவிய ஆரம்பக்கட்ட குழப்பங்கள் காரணமாகப் பலி எண்ணிக்கை முதலில் 90 என்று அறிவிக்கப்பட்டு, தற்போது அதிகாரப்பூர்வமாக 82 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
விபத்தின் பின்னணியும் ஆரம்பக்கட்ட குழப்பங்களும்
கடந்த வெள்ளிக்கிழமை இரவு, சான்சி மாகாணத்தின் சின்யுவான் (Qinyuan) கவுண்டியில் உள்ள லியுஷென்யு சுரங்கத்தில் சுமார் 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் பணியில் இருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது. நச்சுத்தன்மை வாய்ந்த கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) வாயு கசிவைக் காட்டும் சென்சார்கள் எச்சரித்த சில நிமிடங்களிலேயே சுரங்கத்திற்குள் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
விபத்து நடந்த உடனேயே அங்கு பெரும் பதற்றமும் குழப்பமும் (Chaos) நிலவியதால், சீன அரசு ஊடகங்கள் முதலில் பலி எண்ணிக்கை 90 ஆக உயர்ந்ததாகத் தெரிவித்தன. ஆனால், சனிக்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உள்ளூர் அதிகாரிகள், துல்லியமான கணக்கெடுப்பிற்குப் பிறகு பலி எண்ணிக்கை 82 என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் 120-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நச்சு வாயு தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிபர் ஷி ஜின்பிங் அதிரடி உத்தரவு; அதிகாரிகள் கைது!
இந்தக் கொடூர விபத்து குறித்து சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததுடன், நிலத்தடியில் சிக்கியுள்ள மீதமுள்ள நபர்களை மீட்க “எந்தவொரு முயற்சியையும் கைவிடக் கூடாது” (Spare no effort) என்று மீட்புக் குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு நடத்திய முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட ‘டாங்ஜோ நிலக்கரி குழுமம்’ (Tongzhou Coal Group) கடுமையான சட்ட விதிமீறல்களில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, சுரங்கத்தின் உண்மையான வரைபடமும் (Blueprint), அவர்கள் கொடுத்த வரைபடமும் ஒத்துப்போகாததால் மீட்புப் பணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுரங்க நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது ‘ஸ்டேட் கவுன்சில்’ (State Council) மூலமாக கடுமையான விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.
விபத்துகளின் மையமாகும் ஷான்சி மாகாணம்
சீனாவின் ஒட்டுமொத்த நிலக்கரி தேவையில் மூன்றில் ஒரு பகுதியை (1.3 பில்லியன் டன்) சான்சி மாகாணம் மட்டுமே உற்பத்தி செய்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டிலேயே, இந்த லியுஷென்யு சுரங்கத்தில் “அதிகப்படியான வாயு ஆபத்து” இருப்பதாகத் தேசிய சுரங்கப் பாதுகாப்பு நிர்வாகம் எச்சரித்திருந்தது. எனினும், உற்பத்தி இலக்குகளை எட்ட பாதுகாப்பு விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டதே இந்த 82 உயிர்களின் பலிக்குக் காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 25 சுரங்கங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
