நிலவின் தென்துருவத்தை ஆராய இதுவரை எந்தநாடு முன்வரவில்லை. இந்நிலையில் அந்த பகுதியை ஆய்வு செய்ய இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதில் இருந்த விக்ரம் லேண்டர் செப்.,7 ம் தேதி நிலவில் தரையிறங்க  400 மீட்டர் தூரம் இருக்கும்போது அதன்தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் வெற்றி பெற முடியவில்லை. இதற்காக இஸ்ரோ நாசாவின் உதவியை நாடியது. இந்நிலையில் விக்ரம் லேண்டர் விழுந்து கிடக்கும் இடத்தை நாசா கண்டுபிடித்ததாக இன்று செய்தி வெளியானது. இந்நிலையில் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது சென்னையை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து சென்னை தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றும்  சண்முக சுப்பிரமணி தெரிவித்ததாவது. நாசா நிலவு குறித்து எடுத்த படங்களை வெளியிட்டிருந்தது. அதை உன்னிப்பாக  ஆராய்ந்தேன். அதில் ஒரு சில போட்டோக்களில் சில புள்ளிகள் இருந்ததை கண்டு அது குறித்து விரிவாக ஆய்வு செய்தேன். இதில் அவை விக்ரம் லேண்டரின் பாகங்கள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டேன். இது குறித்து நாசாவை தொடர்பு கொண்டு நான் தெரிவித்தேன். இதையடுத்து நாசா விஞ்ஞானிகளும் நான்  சொன்ன போட்டோக்களை மீண்டும் ஆராய்ந்து அது விக்ரம் லேண்டர்தான் என்பதை உறுதிபடுத்தி என்னை பாராட்டினர். என்றார்.  இவரது சொந்த ஊர் மதுரை.

போட்டோவில் உள்ள பச்சை நிறப் புள்ளிகள் லேண்டரின் சிதைவுகள் என்றும், நீல நிற புள்ளிகள் லேண்டரின் பாகங்கள் விழுந்ததால் ஏற்பட்ட பள்ளங்கள் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY