செல் தர மறுத்த மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!…

158
Spread the love

திருப்பூரில் ஒரு தனியார் பனியன் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் அப்துல் சமது (32). இவரது மனைவி நிஷா பானு (26). இவருக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன் அப்துல் சமதுவை திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருப்பூர், காங்கயம் ரோடு சத்யா நகர் விரிவு பகுதியில் வசித்து வருகின்றனர்.  திருமணத்திற்குப் பின்பும் நிஷா பானு தனது நண்பர்களுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் நிஷா மீது சமதுக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், நேற்றிரவு அப்துல் சமது வீட்டிற்கு வந்த போது நிஷா பானு செல்போனில் வேறு ஒருவருடன் பேசி கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து ஆத்திரமடைந்த சமது அந்த அழைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நிஷா பானுவிடமிருந்து செல்போனைப் பறிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் நிஷா அவர் செல்போனைத் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சமது அருகில் இருந்த குக்கரை எடுத்து நிஷாவின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதனால் கீழே சுருண்டு விழுந்துள்ள நிஷா பானுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார் சமது. பின்னர் அப்துல் சமது தாமாகவே, திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நிஷா பானுவின் உடலைக் கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்துல் சமது மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY