தமிழக தேர்தல் திருவிழா இன்று மாலை 7 மணியுடன் முடிகிறது…

32
Spread the love

தமிழகத்தில் தற்போதைய சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத்தேர்தலுக்கான தேதி கடந்த பிப்ரவரி 26ம் தேதி அறிவிக்கப்பட்டது.  அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடந்தது. மார்ச் 22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,998 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் 3,585 ஆண் வேட்பாளர்களும்,  பெண் வேட்பாளர்கள் 411 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் இருவரும் களத்தில் உள்ளனர். இதில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அடங்கும். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி – அதிமுக கூட்டணி இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒரு மாதமாக  சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். மேலும், இந்த கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தனர்.

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி, அமித்ஷா, ராமதாஸ், அன்புமணி, ஜி.கே.வாசன், நட்டா, யோகி ஆதித்ய நாத், ஸ்மிருதிராணி உள்ளிட்ட பலரும் பிரசாரம் செய்தனர்..தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் இன்று இரவு 7 மணியுடன் ஓய்கிறது. இன்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் பிரசாரம் செய்வதை நிறுத்திவிட வேண்டும். இரவு 7 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக்கூடாது. வீடுவீடாக சென்று ஏப்ரல் 6ம் தேதி வரை வாக்கு கேட்க கூடாது. தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் இன்று மாலை 7 மணியுடன் தொகுதியை காலி செய்துவிட்டு வெளியேறி விட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து தங்கும் விடுதிகள், கல்யாண மண்டபங்களில் போலீசார் சோதனை நடத்தி சம்பந்தம் இல்லாத நபர்களை தொகுதியை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY