டிஆர்பி குளறுபடி..37, 886 பேர் தேர்வு எழுத முடியாமல் போன சோகம்!

133
Spread the love

கடந்த 27-ஆம் தேதி முதல் 3 நாட்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. முதன்முறையாக ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது. மற்ற ஆசிரியர் தேர்வுகளை விட இந்த முதுகலை ஆசிரியர் தேர்வை குறைவானவர்களே எழுதுவார்கள். இந்நிலையில்  இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் 37, 886 பேர் தேர்வு எழுதவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் தேர்வு மையங்கள் தொலைதூர மாவட்டங்களில் ஒதுக்கப்பட்டிருந்ததுதான் காரணம் என்று முதுகலை பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது தேர்வாளர்களுக்கு தேர்வு மையங்களுக்கான ஆப்சன்களும் கொடுக்கப்பட்டிருந்தது. தங்கள் ஊர்களுக்கு அருகில் உள்ள 2 மாவட்டங்களை தேர்வர்கள் தேர்வு செய்திருந்தனர். ஆனால் ஹால் டிக்கெட்டுகளை டவுன் லோடு செய்த போது விண்ணப்பதாரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் விண்ணப்பதாரர்களுக்கு மிகவும் தொலைதூர மாவட்டங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

உதாரணமாக திண்டுக்கல்லை சேர்ந்தவர்களுக்கு சென்னை, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களும், திருச்சியை சேர்ந்தவர்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் என்றும், திருநெல்வேலியை சேர்ந்தவர்களுக்கு திருச்சி, கரூர், நாமக்கல் மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான பெண் விண்ணப்பதாரர்கள் தேர்வே எழுதாவிட்டாலும் பரவாயில்லை என்கிற விரக்திக்கு தள்ளப்பட்டனர். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர். ஆனால் இது குறித்து விண்ணப்பத்திலோ, அல்லது முன்கூட்டியே அறிவிப்பு எதுவும் கிடையாது.

இது முழுக்க,முழுக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் நடந்தது என்றும், எனவே தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு தேர்வு கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் இதுபோல இனி நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

LEAVE A REPLY