ஊராட்சிகளில் ‘செக்’கிற்கு வேலையில்லை.. இனி ஆன்லைன் தான்

4796
ஊராட்சி மன்ற நிதி நிர்வாகம் பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால், காசோலைகள் பயன்பாடு அவசியமற்றதாகி உள்ளது. எனவே எக்காரணத்தை கொண்டும் ஊராட்சி கணக்குகளின் கீழ் காசோலைகளை பயன்படுத்த கூடாது. இருந்தாலும், ஊராட்சியில் பராமரிக்கப்படும் ஊராட்சி கணக்கு-2 என்பதில் (தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின் கட்டணம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கு குடிநீர் கட்டணம் செலுத்தும் கணக்கு) மட்டும் காசோலை மூலம் மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தும் பொருட்டு, காசோலைகளை அனுமதிக்கலாம்.
 
ஊராட்சி கணக்கு-2ன் கீழ் வழங்கப்படும் காசோலைகளின் மீது டி.என்.இ.பி., டி.டபுள்யூ.ஏ.டி. என்ற முத்திரையிட்டு ஊராட்சி தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும். பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்ஆகியோரின் கையொப்பமிடப்பட்ட பின்புதான் பரிவர்த்தனை மேற்கொள்ளப்படும்.
 
மீதித்தொகை ஒப்படைப்பு
 
எனவே ஏற்கெனவே பயன்படுத்திய காசோலைகள் தவிர மீதமுள்ள காசோலைகளை எவ்வித காரணத்தை முன்னிட்டும் பயன்படுத்தக் கூடாது. கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட காசோலையின் எண் குறிப்பிட்டு, அந்த வங்கி கணக்கில் உள்ள மீதித்தொகையை உரிய படிவத்தில் பதிவு செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மீதமுள்ள காசோலைகளை தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலர், சம்பந்தப்பட்ட உதவி இயக்குநருக்கு (ஊராட்சிகள்) அனுப்பி வைக்க வேண்டும்.
 
அவ்வாறு பெறப்படும் மீதமுள்ள காசோலைகளை உரிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தனது அலுவலகத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஊராட்சி மன்றத் தீர்மான பதிவேடு முழுவதுமாக பக்க எண்களை உறுதி செய்து தற்போது பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY