வானம் … வசப்படும்

129

அரசர் ஒருவருக்கு திடீரென்று ஒருநாள் தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. (அந்த காலத்தில் எடை மேடைகளோ, யானைகளை அளக்கும் அளவுக்குப் பெரிய துலாபாரமோ இருந்திருக்காது தானே…) எப்படி அளப்பது? என்று அமைச்சரிடம் கேட்க அவருக்கும் தெரியவில்லை. சபையில் இருந்த யாருக்கும் அதற்கான வழி தெரியாது ‘என்ன விடை சொல்வது?!’ என்று விழித்தனர்… அந்த சமயத்தில் அமைச்சரின் 10 வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். எல்லோரும் கிண்டலாகச் சிரித்தனர். ஆனாலும் மன்னர் அந்தச் சிறுவனுக்கு வாய்ப்புக் கொடுத்தார். சிறுவன் யானையை நதிக் கரைக்கு அழைத்துச் சென்றான்… எல்லோரும் பின்னால் சென்றனர். நதியில் நிறுத்தப்பட்டிருந்த பெரும்படகு ஒன்றை வரவழைத்தான். அதில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே தண்ணீர் நனைந்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்யச் சொன்னான். பிறகு, யானையைப் படகில் இருந்து இறக்கிவிட்டு பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன…இப்போது படகில் இருந்த கற்களை மன்னனிடம் காட்டி, “அரசே! அந்த கற்களை எல்லாம் எடை போட்டு கூட்டிக் கொள்ளுங்கள்… அவற்றின் எடைதான் இந்த யானையின் எடை” என்றான் அந்தச் சிறுவன். சிறுவனைப் பார்த்து அனைவரும் வியந்தனர். மன்னரும் சிறுவனை பாராட்டினார். அங்கிருந்தவர்கள் எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத் தான் பார்த்தார்கள். ஆகவே அவர்களால் தான் எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான். அதுபோல தான் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அதனைச் ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பயமும் குழப்பமுமே ஏற்படும்… அந்த பதட்டத்தில் விடை கிடைக்காது. பிரச்சனைகளை புரிந்து கொள்ளுங்கள்… அவற்றை சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக் கொண்டு தீர்க்க முயலுங்கள். கண்டிப்பாக வானம் வசப்படும்…. 

LEAVE A REPLY