பிரதமரின் தொகுதியை காலியானதாக அறிவிக்க கோரி வழக்கு

1028

கடந்த லோக்சபா தேர்தலிலின் போது பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட, உ.பி.,யின் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து, பி.எஸ்.எப்., மாஜி வீரர், தேஜ் பகதுார் வேட்பு மனு தாக்கல் செய்தார்.மனுவை, தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர்.இதை எதிர்த்து, அவர் தாக்கல் செய்த மனுவை, அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, தேஜ் பகதுார் தரப்பில் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2019ல், நாடு முழுதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், உ.பி.,யின் வாரணாசி தொகுதியில் என் வேட்பு மனு, தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.இந்த நடவடிக்கை, விதிகளை முறையாக பின்பற்றாமல் எடுக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்து நான் தாக்கல் செய்த மனுவை, போட்டியிடும் தொகுதியில், நான் வசிக்கவோ அல்லது வேட்பாளராகவோ இல்லை என கூறி, அலகாபாத் உயர் நீதிமன்றம், மே, 9ல், தள்ளுபடி செய்தது.’நாட்டின் குடிமகன், எந்த தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவே இந்த தீர்ப்பு தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்பதுடன், தேர்தல் பிரதிநிதித்துவ சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது. எனவே, பிரதமர் வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியை, காலி இடமாக அறிவிப்பதுடன், என் வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரி நிராகரித்ததை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வின் முன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இரண்டு வாரங்களுக்குப் பின், இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY