கிழக்கு தொகுதி பாதுகாப்பு படைவீரனாக இருப்பேன்… – வெல்லமண்டி நடராஜன்

98
Spread the love

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும்,  மாநகர மாவட்ட அதிமுக செயலாளரும், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலையில் இருந்து ஆயிரக்கணக்கான அதிமுக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களுடன் பேரணியாக புறப்பட்ட வெல்லமண்டி நடராஜன்,  காந்தி மார்க்கெட், பெரியகடைவீதி, தேரடி கடைவீதி, மலைக்கோட்டை, என் எஸ் பி ரோடு, நந்தி கோவில் தெரு, சத்திரம் பேருந்து நிலையம், வழியாக அண்ணா சிலை சென்றடைந்தார். அங்கு பிரச்சார நாட்களில் தனக்கு பேருதவியாக இருந்த அதிமுக பிரமுகர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுநிலையினர், காவல்துறையினர் என அனைத்து தரப்பினருக்கு அவர் நன்றி தொிவித்துக்கொண்டார். பிரச்சாரத்தின் நிறைவில் அவர் பேசும்போது…. தமிழக அமைச்சராக இருந்த வரை தமிழகத்திற்காக பாடுபட்டேன். என் இறுதி மூச்சு இருக்கும் வரை அதிமுகவின் விசுவாசமான தொண்டனாக இருப்பேன். என்னை நம்பி வாக்களிக்க போகும் பொதுமக்களின் நலன்களை பாதுகாப்பதில் என்றென்றும் உறுதியாக இருப்பேன். மொத்தத்தில் திருச்சி மக்களின் சேவகனாக, பணியாளாக, ஒரு பாதுகாப்பு படை வீரனாக என் உயிர் உள்ளளவும் உழைத்திடுவேன். எனவே

என்னை ஆதரித்து கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்….. என்று உருக்கமாக கேட்டுக்கொண்டார். இதனை கேட்ட அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக ஸ்தம்பித்து போயினர். இந்த இறுதி கட்ட பிரச்சார பேரணியில் ஆவீன் பால் வள தலைவர் கார்த்திகேயன், மாநகர மாவட்ட இணைச்செயலாளர் ஜாக்லின், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளர் சீனிவாசன், மாநகர மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன், பொருளாளர் மனோகர், பொதுச் செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, கிழக்கு தொகுதி அதிமுக பிரச்சார பொறுப்பாளரும், அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மைந்தனுமாகிய  வெல்லமண்டி ஜவகர் மற்றும்  முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY