வாட்ஸ் அப் அட்மின் பொறுப்பாக முடியாது.. மும்பை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..

889
Spread the love

மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கிஷோர் தரோன்(33). இவர் தன் நண்பர்கள் உள்ளிட்ட பலரை இணைத்து, வாட்ஸ் ஆப் குழு துவங்கினார். அந்த வாட்ஸ் அப் குழுவிற்கு அவரே அட்மினாகவும் இருந்தார். இந்நிலையில், 2016ல், அந்த வாட்ஸ் ஆப் குழுவில் இருந்த பெண் ஒருவரை, மற்றொரு ஆண் உறுப்பினர் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி பதிவிட்டார். அந்த ஆண் உறுப்பினரை குழுவில் இருந்து நீக்கியோ அல்லது எச்சரிக்கை விடுத்தோ, குழு நிர்வாகியான கிஷோர் நடவடிக்கை எடுக்கவில்லை என போலீசில் புகார் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வாட்ஸ் அப் குழுவின் அட்மின் என்கிற முறையில் கிஷோர் மீது, பாலியல் துன்புறுத்தல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வழக்கு கோண்டியா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில், கிஷோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளனர்.. அதில் வாட்ஸ் ஆப் குழுவில் உறுப்பினர்கள் பதிவிடும் தகவல்களை மாற்றவோ, தணிக்கை செய்யவோ  அட்மினால் முடியாது. புதிய உறுப்பினரை சேர்ப்பது, நீக்குவது மட்டுமே அட்மினால் செய்ய முடியும். இந்நிலையில், குழுவில் பகிரப்படும் தகவல்களுக்கு அட்மின் பொறுப்பாக முடியாது. எனவே, கிஷோர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY