Spread the love

 செய்தியாளர்களை ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசிய தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்துக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:  இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. இந்த சந்திப்பின் போது செய்தியாளர்களை பார்த்து,’ யார் நீ? வா, போ’ என்று ஒருமையில் மரியாதைக் குறைவாக பிரேமலதா விஜயகாந்த் பேசியது கண்டிக்கத்தக்கது. திருமதி.பிரேமலதா விஜயகாந்த்தின் இந்த தரக்குறைவான ஆணவப் பேச்சை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் பிரேமலதா செய்தியாளர்களைப் பார்த்து , “ நீங்கள் 24 மணி நேரம் எங்கள் ‘ கேட்’ வாசலில் காத்திருந்தால், நாங்கள் ஓடி, ஓடி வந்து உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என தொடர்ந்து கூறியதும், கடமையில் இரவும் பகலுமாக கடும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் மதிப்புடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. இவ்வாறு பாரதிதமிழன் குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் மூத்த பத்திரிக்கையாளர் மாலன் தனது டிவிட்டரில் அறமற்ற பேரம், அப்பட்டமாகப் பொய் உதிர்ப்பது, ஆணவம் நிறைந்த பேச்சு, ஊடகங்களை இழிவு படுத்துவது, இத்தனை குணக்கேடுகள் கொண்ட தலைமையைப் பெற்றிருக்கும் தேமுதிகவோடு அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளுமானால் அதைவிடப் பெரிய வெட்கக் கேடு வேறொன்றில்லை. அப்படி வைக்குமானால் அவர்கள் வாக்குகளை இழக்கவும் கூடும். தேமுதிக உறவை அதிமுக -பாஜக உதற வேண்டும்
#defeatdmdk
ஊடக சகாக்களுக்கு ஓர் வேண்டுகோள்: மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம் என்றும் மாலன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு நலச்சங்கத்தின்  பொதுச்செயலாளர் மிதார் பிரேமலதாவின் செயலுக்கு கண்டனம்  தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY