நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றுமொரு புதிய போஸ்டரை ‘ஜனநாயகன்’படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’.கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தில் விஜய் உடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, கவுதம் மேனன், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ஜன நாயகன் திரைப்படத்திலிருந்து தி ஃபஸ்ட் ரோர் என்ற பெயரில் சிறப்பு வீடியோவை வெளியிட்டு விஜய்க்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. பிறந்தநாள் என்பதால் அந்த க்ளிம்ப்ஸ் வீடியோ நள்ளிரவில் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ அதிக வியூஸ்களை பெற்றுள்ள நிலையில் தற்போது போலீஸ் சீருடையில் விஜய் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் காவல் சீருடையில் மிடுக்காக வந்து கவனம் ஈர்க்கிறார் விஜய்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய், இதுவே தனது கடைசி படம் என தெரிவித்துள்ளார். முழுநேர அரசியலில் கவனம் செலுத்தும் வகையில் இதுவே அவரது கடைசி படம் என விஜய் ஏற்கெனவே அறிவித்து விட்டார். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் அவரின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படுவதால் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி விஜய்யின் இதுவரை அல்லாத உச்சபட்ச வியாபாரத்தை இப்படம் எட்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது