Skip to content

ரஷ்ய அதிபர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று மாலை டெல்லி வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று (டிச.5) காலை ஜனாதிபதி மாளிகையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு முறைப்படி, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டது.

புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பின் அங்கிருந்து டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு செல்லும் புதின், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதைத் தொடர்ந்து ஹைதராபாத் இல்லத்தில் துவங்கும் உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டிற்கு பின், பிரதமர் மோடி அவருக்கு ஹைதராபாத் இல்லத்திலேயே மதிய விருந்து அளிக்கிறார். அதன்பின், இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்துகின்றனர். குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டு உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். அதன்பின், இன்று இரவு 9:00 மணிக்கு புறப்பட்டு மீண்டும் மாஸ்கோ செல்கிறார்.

error: Content is protected !!