தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தை அரசியல் ரீதியாக மேலும் பலப்படுத்தும் நோக்கில், (திமுக) சார்பில் பிரம்மாண்டமான மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாடு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் நகரில், வரும் டிசம்பர் 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
திமுக மகளிர் அணிச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெறுகிறது. இத்தகைய பெரிய மாநாட்டை நடத்துவதன் மூலம் திமுக பின்வரும் இலக்குகளை அடையத் திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களின் மூலம் பெண்களிடையே பெருகியுள்ள ஆதரவை, வாக்குகளாக மாற்றுவது குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் உள்ள கட்சி அமைப்புகளைத் தீவிரப்படுத்தி, புதிய உத்வேகம் அளிப்பது.
தமிழகத்தில் மகளிர் நலன் சார்ந்து அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் மற்றும் சாதனைகளை மாநாட்டில் எடுத்துரைத்து, மகளிர் அணியினரை மேலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் என எடுத்துரைக்கப்படுகிறது. இந்த மாநாட்டில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்றுச் சிறப்புரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஆற்றும் உரை, வரவிருக்கும் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் உத்திகள் மற்றும் மகளிர் நலனுக்கான அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது.
பல்லடத்தில் நடைபெறவுள்ள இந்த மகளிர் அணி மாநாடு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் மெகா ஆயத்தப் பணிகளின் முக்கியத் தொடக்கமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

