Skip to content

பொங்கல் பண்டிகை- தஞ்சையில் கரும்பு விற்பனை மும்முரம்


தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தை பொங்கலை முன்னிட்டு அச்சு வெல்லம், பச்சரிசி, நெய், முந்திரி, திராட்சை, கரும்பு, இஞ்சி, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக தேவை ஏற்படும். பொங்கல் பண்டிகை அன்று காலை பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட மக்கள் இப்போதே தயாராகி விட்டனர்.
இதற்கு ஏற்றார் போல் பொங்கல் பண்டிகையில் முக்கிய இடத்தை பிடித்துள்ள கரும்புகள் விற்பனையும் தற்போது பல்வேறு இடங்களில் மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கரும்பு, வாழை, வெற்றிலை, பரங்கிக்காய், வெள்ளரிக்காய், உளுந்து, எள், மக்காச்சோளம், பூக்கள் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் கரும்பும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, சூரக்கோட்டை, துறையூர், திருக்காட்டுப்பள்ளி, திருவோணம், வெட்டிக்காடு, மாரியம்மன்கோவில், சாலியமங்கலம், கம்பர்நத்தம், குளிச்சப்பட்டு, ராராமுத்திரைக்கோட்டை, வாளமரக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரும்புகள் நடவு செய்யப்பட்டு இருந்தது. தற்போது மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கரும்பு அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 வாரமே உள்ள நிலையில் அதனை அறுவடை செய்து சந்தை படுத்தும் பணி தொடங்கி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் கரும்பு விற்பனை தற்போதே தொடங்கி நடந்து வருகிறது. தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே இப்போதே பொங்கல் கரும்புகள் விற்பனைக்கு வந்துள்ளன. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டின் விலை ரூ.350 முதல் ரூ.500 வரை விற்கப்படுகிறது. கரும்புகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் நேரத்தில் விற்பனை இதைவிட மும்முரமாக நடைபெறும் .

error: Content is protected !!