Skip to content

ராமதாஸ் பற்றிய கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய எடப்பாடி…

பாமக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த கையோடு, இன்று மாலை டெல்லி புறப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி 2 முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதையடுத்து அமித்ஷா டெல்லி புறப்பட்டார்.

இந்த நிலையில் இன்று காலையிலேயே எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இதன் மூலமாக அதிமுக – பாமக கூட்டணி உறுதியாகியது. இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து, அதிமுக – பாஜக கூட்டணியில் பாமக இணைந்துவிட்டதாக அறிவித்தனர். பாமகவுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாகவும், அதுதொடர்பான பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாமக கூட்டணியை இறுதி செய்த கையோடு, இன்று மாலை எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணிக்க உள்ளார். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லி பயணிக்கும் எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பின் போது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பி வருகிறது.

இதனை தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் முன்னணி அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகிய மூன்று கட்சிகளும் தங்கள் கூட்டணியை பலப்படுத்த தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகின்றன. மற்ற கட்சிகளின் தலைவர்களும் கூட்டணி பேச்சுகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு இன்று வருகை தந்தார். பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வந்த நிலையில், கூட்டணி குறித்து எந்த முடிவையும் அக்கட்சி வெளியிடாமல் இருந்தது. கடந்த மாதம் பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகத்திற்கு வருகை தந்து எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை சந்திக்கா விட்டாலும், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்து, கூட்டணியில் இணைக்குமாறு அமித் ஷா அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய 2 கட்சிகளும் அதிமுக – பாஜக கூட்டணியில் தான் இடம் பெற்றிருந்தன. பாமக கட்சியில் உட்கட்சி பூசல் நிலவும் சூழலில், தேர்தலுக்குள் தந்தையும் மகனும் இணைவார்களா என்ற சந்தேகம் எழுந்தது. அப்படி இணையாவிட்டால் அதிமுக யாருடன் பேச்சுவார்த்தை நடத்தும்? கூட்டணி விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியாக இருந்தது. இந்நிலையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து பாமக போட்டியிடும். தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம், பின்னர் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார். “ராமதாஸ் உடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா?” என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனடியாக வணக்கம் போட்டுவிட்டு சென்றார் எடப்பாடி பழனிசாமி. அன்புமணியும் எந்த பதிலும் அளிக்காமல் சென்றுவிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!