Skip to content

5 பவுன் நகையை மீட்க கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நீலகிரி மாவட்டம் உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்ற பெண், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தின் போது திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். கடந்த கொரோனா காலகட்டத்தில், தனது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரிகா என்பவரிடம் காயத்ரி 7 பவுன் தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார். அதில் 2 பவுன் நகைகள் மட்டுமே திருப்பி அளிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பவுன் நகைகளை மீட்டுத் தரக் கோரி காயத்ரி தொடர்ந்து போராடி வந்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என காயத்ரி குற்றம்சாட்டி வந்துள்ளார். இந்த விரக்தியில் இன்று ஆட்சியர் அலுவலகம் வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!