Skip to content

எஸ்.ஐ.ஆர் பணியால் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் – கேட்டை மூடிப் பெற்றோர்கள் மறியல்

வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்கள் சரிவர வராததைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று பள்ளியின் கேட்டை இழுத்து மூடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் ஏழு ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், கடந்த ஒரு மாதமாக ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே வருவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தி ஐந்து மாதங்கள் ஆகியும் இதுவரை தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாதது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாகக் குளறுபடிகளால் ஆரம்பப் பள்ளி மாணவர்களை ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வேறு கட்டிடத்திற்கு அலைக்கழிப்பதும், கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் மாணவர்கள் உயிருக்கு அஞ்சிச் செல்லும் நிலையும் நீடிக்கிறது. இது குறித்துத் தகவலறிந்து வந்த ஆசிரியரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள எஸ்.ஐ.ஆர் (SIR) பணிகளால் கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் பள்ளிக்குச் சரிவர வர முடிவதில்லை என்றும் தெரிவித்தனர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்தப் போராட்டத்தால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனப் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கீரப்பாக்கம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

error: Content is protected !!