தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருவள்ளுர் மாவட்டம், போளிவாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிகழ்ச்சியின் காணொளிக்காட்சி நேரலை அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சி, முருகன் திருமண மண்டபத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா கலந்துகொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களின் நலனை முன்னுரிமையாக கொண்டு தூய்மைப் பணியாளர்கள் குடும்பங்களின் எதிர்காலத்தை கொண்டு வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் வகையில் ரூபாய் 10 இலட்சம் நிதியுதவி வழங்கும் திட்டம், தொழில்

தொடங்குவதற்கு ரூ.3.50 இலட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம், குழந்தைகளுக்கான புதிய உயர்கல்வித் திட்டம், வீடு வழங்கும் திட்டம், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் கடந்த 15.11.2025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக தூய்மைப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் மாநிலம்

முழுவதும் உள்ள 25 மாநகராட்சிகள், 145 நகராட்சிகள் மற்றும் 479 பேரூராட்சிகளில் பணியாற்றும் 1,29,689 தூய்மை பணியாளர்களுக்கு உணவுத்திட்டத்தினை விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்துள்ளார்கள்.
அதனைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் நகராட்சியில் அமைந்துள்ள முருகன் திருமண மண்டபத்தில் அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவினை வழங்கினார். இதன் மூலம் அரியலூர் நகராட்சியில் பணியாற்றும் 153 தூய்மைப் பணியாளர்கள், ஜெயங்கொண்டம் நகராட்சியில் பணியாற்றும் 149 தூய்மைப் பணியாளர்கள், உடையார்பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் 28 தூய்மைப் பணியாளர்கள், வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பணியாற்றும் 19 தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 349 தூய்மை பணியாளர்களுக்கு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட சத்தான உணவுகள் சிற்றுண்டி கலன்களில் நிரப்பப்பட்டு உணவானது உரிய நேரத்தில் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது.
மேலும், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் உணவுத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் சகுந்தலா என்பவர் தெரிவிக்கையில், நான் தினசரி அதிகாலையில் எழுந்து பணிக்கு வருவதன் காரணமாக எனக்கு சமைப்பதற்கு நேரம் இருப்பதில்லை. காலை உணவு சாப்பிடுவதற்கும் நேரமும் கிடைக்காது. தூய்மைப் பணிகள் முடிவுற்ற பின்னர் எனது வீட்டிற்கு சென்று உணவு சாப்பிடுவேன். தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கான உணவுத்திட்டத்தினை வழங்கியதன் காரணமாக எங்களுக்கு காலையிலேயே சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இனி நான் பசியின்றி என்னுடைய பணிகளை மேற்கொள்வேன். தூய்மைப் பணியாளர்களின் உடல் நலனில் மிகுந்த அக்கறைக்கொண்டு இத்திட்டத்தினை செயல்படுத்தியுள்ள தமிழ்நாடு அரசுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என சகுந்தலா என்பவர் தெரிவித்தார்.
இதேபோன்று முதலமைச்சரின் உணவுத்திட்டம் கிடைக்கப்பெற்று பயன்பெறும் சரோஜா என்பவர் தெரிவிக்கையில், நான் அரியலூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்களராக பணி செய்து வருகிறேன். நான் தினமும் காலையிலேயே வேலைக்கு வந்துவிடுவதால் எனக்கு காலை உணவு செய்வதற்கு நேரம் கிடைக்காது. பெரும்பாலான நாட்களில் காலை உணவு உட்கொள்ளாமல் பணி மேற்கொள்வேன். தற்போது முதலமைச்சரின் உணவுத்திட்டத்தின் மூலம் எங்களுக்கு காலை நேரத்தில் உணவு வழங்கப்படுவது எனக்கு மிகழ்ச்சியாக இருக்கிறது. இனி என்னுடைய பணிகளை பசியின்றி மேற்கொள்வேன். இத்திட்டத்தினை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என சரோஜா என்பவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

