சேலம்: பாமக இணை பொதுச் செயலாளர் அருள் எம்எல்ஏ சேலத்தில் இன்று, நிருபர்களிடம் கூறியதாவது:
பொய்யை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்யும் அன்புமணி கூட்டம், அதே பொய்யுடன் தேர்தல் ஆணையத்தையும் விலைக்கு வாங்கி உள்ளது. தேர்தல் ஆணையம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு போட்டதில் உள்நோக்கம் உள்ளது. பணத்தை கொடுத்தும், அதிகாரத்தை பயன்படுத்தியும் தேர்தல் ஆணையத்தை விலைக்கு வாங்கியுள்ளனர்.
எங்களிடம் உள்ள ஆவணங்களை வைத்து அன்புமணியை தலைவராக கூறுகிறோம் என்று தற்போது தேர்தல் ஆணையம் தான் பொய்யான செய்தியை கூறுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை, கடந்த 04.12.25 ல் வழங்கிய தீர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை, அப்படியேதான் உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் அன்புமணி தான் தலைவர் என்று கூறவில்லை. தீர்ப்பின் பாரா 17, 38ல் மிகத் தெளிவாக ராமதாசும் தலைவர் இல்லை, அன்புமணியும் தலைவர் இல்லை, ராமதாஸ் நிறுவனர் என கூறப்பட்டுள்ளது. மாம்பழ சின்னத்தை உரிமை கொண்டாடும் உரிமை, இருவருக்கும் இல்லை என அப்போது தேர்தல் ஆணையம் கூறியது. ஆனால் தேர்தல் ஆணையம் தற்போது ஒருதலைப் பட்சமாக செயல்படுகிறது.
சிவில் நீதிமன்றம் தலைவர் யார் என்பதை சொல்லும், அதுவரை அன்புமணி தலைவர் இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே சிவில் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், ராமதாஸ் தான் தலைவர் என்று தீர்ப்பு வரும் என நம்புகிறோம். பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சி இல்லை, அது பதிவு செய்யப்பட்ட கட்சி. அதனால் அந்த கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லை என்று சொன்ன தேர்தல் ஆணையம், எப்படி தற்போது தலையிடுகிறது. அன்புமணி தன்னிடம் உள்ள அதிகாரம், பணபலத்தை வைத்து தேர்தல் ஆணையத்தை வளைத்து போட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் நீதி இல்லை, நேர்மை இல்லை, விலை போகிற நம்பக தன்மையற்ற ஆணையமாக உள்ளது. தைலாபுரம் தோட்டத்தில் உள்ள கதவு தற்போது மூடப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும். அன்று கூட்டணி முடிவாகும் என்றார்.

