சென்னை துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பூக்கடை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்களிடம் கள ஆய்வு (சர்வே) பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அனுமதியின்றி சர்வே எடுப்பதாகக் கூறி திமுகவினர் அவர்களைத் தடுத்ததாக சொல்லப்படுகிறது. இது இரு தரப்பினரிடையே வாக்குவாதமாக மாறி, பின் கைக்கலப்பாக உருவெடுத்தது. போலீசார் விரைந்து வந்து தடுத்ததால் பெரிய அளவிலான மோதல் தவிர்க்கப்பட்டது.
இந்த வன்முறை குறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள ஆய்வில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகள் மீது ஆளும் கட்சியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அராஜக தாக்குதல் நடத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த தாக்குதலில் 4 மாத கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களிடையே தவெக-விற்கு பெருகி வரும் செல்வாக்கை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதாகவும், இது அவர்களின் தோல்வி பயத்தையே காட்டுவதாகவும் விஜய் விமர்சித்துள்ளார். மேலும், இந்த அராஜகத்திற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

