Skip to content

காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 2 குழந்தைகள் பலி

சென்னை கேளம்பாக்கம் அருகே நாவலூர், சாமுண்டீஸ்வரி நகர் 2வது தெருவில் சங்கர் என்பவருக்கு சொந்தமான வீட்டின் காம்பவுண்டில் 3 வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் ஆடிட்டர் முருகன் (50) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார். மற்றொரு வீட்டில் வைரமுத்து, அவரது மனைவி செல்வி, மகன் பிரதீப் (10) ஆகியோர் வசிக்கின்றனர். இன்னொரு வீட்டில் சஞ்சீவ்குமார் (30), அவரது மனைவி சோனியா (28), மகள் கிருத்திகா (4), ஒன்றரை வயது மகன் தீரன், சஞ்சீவ்குமாரின் தாய் சித்ரா ஆகியோர் வசித்துள்ளனர்.Urban Transit

இந்நிலையில், சஞ்சீவ்குமாரின் வீட்டில் இன்று காலை அவரது மனைவி சோனியா டீ போடுவதற்கு காஸ் அடுப்பை பற்றவைத்துள்ளார். அதில் ஏற்கெனவே சிலிண்டரில் காஸ் கசிவு ஏற்பட்டிருந்தது. இதனால் சோனியா அடுப்பை பற்றவைத்ததும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் காம்பவுண்டில் இருந்த 3 வாடகை வீடுகளும் சுக்குநூறாக உடைந்தன. இதில் சிலிண்டர் வெடித்து சிதறியதில் தீப்பிடித்து எரிந்ததில் சஞ்சீவ்குமாரின் குழந்தைகள் கிருத்திகா, ஒன்றரை வயது தீரன் ஆகிய இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து, கட்டிட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டனர்.

மேலும், 3 வீடுகளில் குடியிருந்த 7 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். சிலிண்டர் வெடித்து சிதறியதில் அருகில் இருந்த வேலன், பாஸ்கர் ஆகிய 2 பேரின் வீடுகளும் இடிந்து சேதமாகிவிட்டன. இதுகுறித்து தகவலறிந்ததும் சிறுசேரி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 7 பேரையும் மீட்டு, செங்கல்பட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சம்பவ இடத்துக்கு தாழம்பூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த 2 குழந்தைகளின் சடலங்களை கைப்பற்றினர். பின்னர் அச்சடலங்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

error: Content is protected !!