வங்கிக் கடன் மோசடி புகார் தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 11 வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் பெற்ற கடன் தொகையில் பெரும் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது.
சுமார் 19,694 கோடி ரூபாய் கடனில், 2,929 கோடி ரூபாய் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், போலி நிறுவனங்கள் மற்றும் குழும நிறுவனங்களுக்கு இடையே பணப் பரிமாற்றம் செய்து ஏமாற்றியதாகவும் தணிக்கை அறிக்கையில் தெரியவந்தது. இதுதொடர்பாக கடந்த வாரம் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் தொடர்பான 228 கோடி ரூபாய் மோசடி வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில் நிதிப் பரிமாற்றம் தொடர்பான கூடுதல் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த விசாரணை குறித்து அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் கூறுகையில், ‘விசாரணை அமைப்புகளுக்கு அனில் அம்பானி முழு ஒத்துழைப்பு அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

