திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள கங்கன் தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாபு (27). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லதா (23). இந்த தம்பதிக்கு 2 வயதில் தர்சன் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று மதியம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தர்சன், எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீர் நிரப்பிய வாளியில் தலைகுப்புற விழுந்து மயங்கியதாக கூறப்படுகிறது.
வீட்டு வேலைகளில் ஈடுபட்டிருந்த தாய் லதா, சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தை வாளியில் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களின் உதவியுடன் குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் வாளியில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் கங்கன்தொட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

