தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த அண்ணி மீது நடிகை ஹன்சிகா மோத்வானி ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்த பாலிவுட் நடிகை ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானிக்கும், சீரியல் நடிகை முஸ்கான் நான்சி ஜேம்ஸுக்கும் கடந்த 2020ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2022ம் ஆண்டு அவர்கள் பிரிந்தனர். அந்த சமயத்தில், ஹன்சிகா, அவரது அண்ணன் மற்றும் தாயார் ஜோதி மோத்வானி ஆகியோர் மீது நடிகை நான்சி ஜேம்ஸ் போலீசில் புகார் அளித்தார்.
அதில், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், பாலியல் ரீதியாக சித்ரவதைகளை அனுபவித்ததால் தனக்கு முகவாதம் ஏற்பட்டதாகவும் நான்சி குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், தன் மீதான புகாரை ரத்து செய்யக்கோரி ஹன்சிகா ஏற்கனவே மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியிருந்தார். இதற்கிடையே, தொழிலதிபர் சோஹைல் கதுரியாவுடனான தனது விவாகரத்தை கடந்த மார்ச் மாதம் ஹன்சிகா முறைப்படி உறுதி செய்தார். தற்போது மும்பை திண்டோஷி செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹன்சிகா (34) சார்பில் அவரது வக்கீல் அட்னான் ஷேக் ரூபாய் 2 கோடி நஷ்டஈடு கேட்டு சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து ஹன்சிகா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது அண்ணனுக்கும் நான்சிக்கும் திருமணம் நடந்தபோது, நான்சியிடம் 27 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்தேன்.
அந்தப் பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றுவதற்காகவே, என் மீது நான்சி பொய்யான புகார்களை சமூக வலைதளங்களில் கூறி வருகிறார். நான் அவர்களுடன் வசிக்காத நிலையில், என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. எனவே, எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், பெயர் கெட்டதற்கும் அவர் ரூ. 2 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதுடன், இனிமேல் எனக்கு எதிராக எந்த ஒரு கருத்தையும் பேசக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் நான்சி ஜேம்ஸ் சமீபத்தில் பதிவிட்ட கருத்துகளே ஹன்சிகா இந்த அதிரடி முடிவை எடுக்கக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது.
