திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேர்த் திருவிழாவையொட்டி முன்னிட்டு உச்சிபிள்ளையார்க்கு அபிஷேகம், மாலை 6மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தியும் நடைபெற்று மிதுன லக்னத்தில் துவஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து மாலை 7 மணிக்கு கேடயம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து 22-ந்தேதி மாலை 7மணிக்கு சுவாமி கற்பகவிருட்சம் வாகனம், அம்பாள் கிளி வாகனம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. 23-ந்தேதி மாலை 7மணிக்கு சுவாமி பூதம் வாகனம், அம்பாள் கமல வாகனத்தில் வீதி உலாவும், 24-ந்தேதி மாலை 7 மணிக்கு சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னம் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையடுத்து இன்று 25-ந்தேதி காலை விழா 9 மணிக்கு மேல் சிவபக்தியின் சிறந்த இரத்தினாவதிக்கு சிவபெருமான் அவளது தாயாக (தாயுமானவராய்) எழுந்தருளி மருத்துவம் செய்த ஐதீக நிகழ்ச்சி நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு பெரிய கதை உள்ளது.மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் என்று அழைக்கப்படுவதற்கு இந்த சம்பவ நிகழ்ச்சி தான் காரணம்.
காவிரிபூம்பட்டினம் எனப்படும் பூம்புகாரில் வசித்த பெருவணிகர் ரத்தின குப்தன். சிவநெறியில் நின்ற இவரது மகள் ரத்தினாவதியை, திருச்சி மலைக்கோட்டை தெற்கு வீதியில் இருந்த தனகுப்தன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். மலைக்கோட்டையில் வீற்றிருந்த மட்டுவார் குழலம்மை உடனுறை செவ்வந்திநாதர் (தாயுமானவர்) வழிபாட்டால், ரத்தின கருவுற்றார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்க்க, அவரது தாய், பூம்புகாரில் இருந்து திருச்சிக்கு கிளம்பினார். காய மருந்து, மருந்து எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுடன் மகளைப் பார்க்க, திருவரங்கம் வந்து சேர்ந்தார். அப்போது, காவிரியில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், அந்த தாய், காவிரியை கடக்க முடியாமல் தவித்தார். இதற்கிடையே, தாயை எதிர்பார்த்து காத்திருந்த ரத்தினாவதி, பிரசவ வலியால் துடித்ததோடு, செவ்வந்திநாதரை இடைவிடாது துதித்தார். அவரது பிரார்த்தனைக்கு மனமிறங்கிய இறைவன், நரைத்த முடி, தளர்ந்த நடை, கையில் மூங்கில் தடியுடன், மருந்துப் பொருட்களும், எண்ணெய் கலயமும், துணிகளுடன் ரத்தினாவதியின் தாயாக உருவெடுத்தார். ரத்தினாவதிக்கு பிரசவம் பார்த்து, மருந்து, எண்ணெய் கொடுத்தார். பேறு காலப் பணிகள் அனைத்தையும் இறைவனே ரத்தினாவதிக்கு தவறாமல் செய்தார். காவிரி வெள்ளம் வடிந்தவுடன், ரத்தினாவதியின் தாய் வீடு வந்து சேர்ந்தார். அப்போது, இறைவன் – இறைவியுடன், ரத்தினாவதி, தனகுப்தன், ரத்தினாவதியின் தாய் ஆகியோருக்கு அருள் காட்சியளித்தார்.
அன்று முதல் இத்தலத்தின் இறைவன் தாயுமானவர் என்றழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடக்கும் வசந்த பெருவிழாவின், ஐந்தாம் நாள், “செட்டிப் பெண் மருத்துவ வைபவம் நடக்கிறது. இன்று காலை கோவிலில், “செட்டிப் பெண் மருத்துவ வைபவம் சிறப்பாக நடந்தது. செட்டிப் பெண் கருத்தரித்து இருத்தல், வெள்ளத்தால் தாயின் வரவு தடைபடுதல், பார்வதி, கங்கையுடன் ஈசன் தாயாக வருதல், மகப்பேறு பார்த்தல் போன்ற காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. குழந்தைப்பேறு மற்றும் சுகப்பிரசவம் நடக்க வேண்டுதல் செய்தவர்கள், சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தும், வாழைத்தார் வழங்கியும் வழிபட்டனர். விழாவில் செட்டிப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்கும் கோலத்தில் எழுந்தருளிய தாயுமானவர் சாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 8 மணிக்கு அறுபத்து மூவர் முதலான பக்தகோடிகள் சூழ சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி இரத்தினாவதி அம்மையாருக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 26-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு சுவாமி யானை வாகனம், அம்பாள் முத்துப்பல்லாக்கு வாகனர்தில புறப்பாடு நடைபெறும். 27-ந்தேதி மாலை 7மணிக்கு சுவாமி நந்திகேசர் வாகனம், அம்பாள் யாழி வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியும். 28-ந்தேதி மாலை 7மணிக்கு சுவாமி தங்ககுதிரை வாகனம், அம்பாள் பல்லக்கு (இரவு 8:30 மணிக்கு மேல் சுவாமி தேர் நிலையில் வேடுபறி ஐதீகம்) மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு தேர் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து 29-ந்தேதி காலை 5.30 மணிக்கு மேல் 6:30 மணிக்குள் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8மணிக்கு சுவாமி அம்பாள் வெள்ளை சாற்றி தேர்க் கால் கண்டு அருளல் நிகழ்ச்சி நடைபெறும். 30-ந்தேதி காலை 8 மணிக்கு நடராஜர் புறப்பாடும், காலை 10மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி செல்லுதல் நிகழ்ச்சியும், பகல் 12 மணிக்கு மேல் பிரம்ம தீர்த்தமாகிய தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு 11மணிக்கு மேல் தெப்பக்குளம் கூடப்பள்ளி மண்டபத்தில் இருந்தது ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு. இரவு கொடியிறக்கம் (அவரோஹகனம்) மற்றும் சுவாமி எதாஸ்தானம் சேர்தல், ஆச்சார்ய்ய உற்சவம் நடைபெறும். 1-ந்தேதி காலை திருகுறிப்பு தொண்டர் உள்புறப்பாடு, மாலை 7 மணிக்கு சுவாமி தங்ககுதிரை வாகனம், அம்பாள் பல்லாக்கு வாகனத்தில் எழுந்தருளல். 2-ந்தேதி தாயுமான அடிகள் உற்சவம், மாலை 5 மணிக்கு சிரகிரி தட்சிணாமூர்த்தி சாமிக்கும், உற்சவமூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனை, மற்றும் 7மணிக்கு உள் திருமுறை பாராயணத்துடன் ஏகாந்த
சேவை சுவாமி அம்பாள் யதார்த்தமான சேர்த்தல். 3-ந்தேதி இரவு 7மணிக்கு பிச்சாடனார் புறப்பாடு திருவீதி உலா. 4-ந்தேதி மாலை 6 மணிக்கு சண்டிகேஸ்வர் திருவீதி உலா. 5-ந்தேதி காலை 11மணிக்கு பஞ்சமூர்த்திக்கு பிராய்ச்சித்த அபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினால் செய்து வருகின்றனர்.
