தலைநகர் டெல்லியின் ஜாபர்பூர் கலன் பகுதியை சேர்ந்த இளைஞர் பாண்டவ் குமார் (21). இவர் உணவு டெலிவரி வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், பாண்டவ் குமார் தனது நண்பர் கிருஷ்ணாவுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜாபர்பூர் கலன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை அருகே நின்றுகொண்டிருந்தார். பிறந்தநாள் கொண்டாட்ட விழாவில் பங்கேற்றுவிட்டு இருவரும் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் நீரஜ் அங்கு வந்துள்ளார். நீரஜ்-இன் பணி நேரம் முடிந்த நிலையில் அவர் தனது வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, சாலையில் நின்றுகொண்டிருந்த நீரஜ்க்கும், பாண்டவ் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் கான்ஸ்டபிள் நீரஜ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் பாண்டவ் குமார் மீதும் அவரது நண்பர் கிருஷ்ணா மீதும் சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் இருவரும் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து, இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பாண்டவ் குமாருக்கும், கிருஷ்ணாவுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பாண்டவ் குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்தி விட்டு தப்பியோடிய கான்ஸ்டபிள் நீரஜ்-ஐ கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
