தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், அறிவிக்கப்படாத மின்வெட்டை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது 5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் த.வெ.க. வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன், குறு விவசாயிகள் 50,000 ரூபாய்க்குள் கடன் பெற்றிருந்தால் மட்டுமே முழு தள்ளுபடி, 1 லட்சத்திற்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு 5,000 ரூபாய் மட்டுமே தள்ளுபடி என அறிவித்து விவசாயிகளை இந்த அரசு ஏமாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டைச் சரிசெய்ய அரசு எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் துரோகங்களைக் கண்டித்து, அதிமுக விழுப்புரம் மாவட்டக் கழகத்தின் சார்பில் வரும் 19.6.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா. பசுபதி தலைமையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கழக உடன்பிறப்புகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
