அசாமில் சட்டவிரோத அகதிகள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்துள்ளது. வங்கதேசத்தினர் சட்ட விரோதமாக ஆதார் பெறுவதை தடுக்க இம்முடிவை எடுத்துள்ளதாக முதலமைச்சர் விளக்கம். அதே நேரம் 18 வயதினருக்கு குறைவானவர்களுக்கு தொடர்ந்து ஆதார் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
18 வயதுக்கு மேற்பட்டோர் புதிதாக ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்தால், அவர்களுக்கு அட்டை வழங்கப்படாது. மிகவும் அவசியமான மற்றும் விதிவிலக்கான சூழல்களில், மாவட்ட ஆணையர் (District Commissioner) மாநில அரசுக்கு முன்மொழிவு அனுப்புவார். அதை மாநில அரசு ஆய்வு செய்து தகுதியானதா என முடிவெடுக்கும். பாதிக்கப்படாதவர்கள்: 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஆதார் அட்டை வழங்கும் பணி எவ்வித தடையுமின்றி தொடரும்.
பழங்குடியினர் (ST), பட்டியலினத்தவர் (SC) மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மார்ச் 31, 2027 வரை இக்கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இவர்களுக்கும் 18 வயதுக்கு மேல் புதிதாக ஆதார் வழங்கப்படாது. மாநிலத்தின் சில மாவட்டங்களில் ஆதார் அட்டைகளின் எண்ணிக்கை மக்கள் தொகையை விட நூறு சதவீதத்தைத் தாண்டியுள்ளதாகவும், வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் பெறுவதைத் தடுக்கவே இக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
