தலைவர், உறுப்பினர்கள் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடங்கியுள்ளதால், வரும், 1ஆம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்படாது. தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்தல், மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்கள் இடையேயான வழக்குகளை விசாரித்தல் உள்ளிட்ட பணிகளை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மேற்கொள்கிறது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்தி தரக் கோரிய மனுவை ஆணையத்திடம், மின் வாரியம் சமர்ப்பிக்கும். அதன்படி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, கட்டணம் உயர்த்தப்படும்.
மின் வாரியம் மனு சமர்ப்பிக்காத நிலையில், ஆணையமே தன் அதிகாரத்தை பயன்படுத்தி, மின் கட்டணத்தை உயர்த்தலாம். கடந்த 2022 – 2023 முதல், 2026 – 27 வரை, ஆண்டு தோறும் மின் கட்டணத்தை உயர்த்த கோரிய மனு, 2022ல் சமர்ப்பிக்கப்பட்டது. அந்தாண்டு முதல் இந்த நிதியாண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 முதல், 6 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில், 2022ல், 40 சதவீதம், 2023ல், 2.18 சதவீதம், 2024ல், 4.83 சதவீதம், 2025ல் 3.16 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்தாண்டும் வரும், 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தெரியவந்தது. இந்நிலையில், இரண்டு உறுப்பினர்களும் ஏற்கனவே ஓய்வுபெற்ற நிலையில், தலைவராக இருந்த மணிவண்ணன், கடந்த வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்ததால், ஆணையத்தின் அனைத்து பணிகளும் முடங்கிஉள்ளன. இதனால், வரும் ஜூலை யில் மின் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என, மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
