Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மழையிலும்-வெயிலிலும் வீணாகும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள்- அதிர்ச்சி

மழையிலும்-வெயிலிலும் வீணாகும் பல லட்சம் டன் நெல் மூட்டைகள்- அதிர்ச்சி

பல லட்சம் டன் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்க குடோன்கள் இல்லை எனக் கூறி திறந்த வெளியில் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும், நனைந்தும் வீணாகி வரும் சூழலில், தமிழக அரசுக்கு சொந்தமான அரவை மில்லில் 4200 டன் நெல் மூட்டைகளை அடுக்கி வைக்கும் குடோனில் பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தாமல் 18 லட்சம் வீணான சாக்குகளை போட்டு மூடி வைத்துள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்குச் சொந்தமான எம்.ஆர்.எம் (MRM) மில் இயங்கி வருகிறது. கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நெல்மணிகள் இங்கு கொண்டு வரப்பட்டு, அரவைக்குப் பின் பொது விநியோகத் திட்டத்திற்கு (ரேஷன் கடைகளுக்கு) அனுப்பப்படுகின்றன.

இங்கு வரும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக அடுக்கி வைப்பதற்காக 5,000 டன் கொள்ளளவு கொண்ட 6 அதிநவீன குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் குடோன்கள் இருந்தும் எம்.ஆர்.எம்மில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வெட்டவெளியில் வைக்கப்பட்டுப் பாழாகி வருகின்றன.

“குடோன்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன” எனக் காரணம் கூறி, கொள்முதல் நிலையங்களில் இருந்து மில்லுக்கு நெல் மூட்டைகளைக் கொண்டு வருவது தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் பல லட்சம் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடந்து, மழையில் நனைந்து முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நெல் மூட்டைகளை அடுக்க இடமில்லை என்று அதிகாரிகள் பொய் கூறுவதாகவும், உண்மையில் குடோன்களுக்குள் பல ஆண்டுகளாக அப்புறப்படுத்தப்படாத 18 லட்சம் வீணான பழைய சாக்குகளைக் குவித்து வைத்துள்ளனர் என்றும் நமக்குத் தகவல் கிடைத்தது.

இதுகுறித்து நாம் செய்தி சேகரிக்க எம்.ஆர்.எம்மில்லிற்குள் செல்ல முயன்றபோது, அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி மறுத்துக் கெடுபிடி காட்டினர். எனினும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் உதவியுடன் குடோனுக்குள் வீணான சாக்குகள் மலைபோலக் குவிக்கப்பட்டிருப்பதை வீடியோ எடுத்துள்ளேன்.

இந்த அவலம் திருநாகேஸ்வரம் மில்லில் மட்டுமன்றி, இரும்புத்தலை மற்றும் ஆர்சுத்திப்பட்டு ஆகிய நெல் சேமிப்புக் கிடங்குகளிலும் அரங்கேறி வருகிறது. அங்கேயும் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட குடோன்களில் பழைய சாக்குகள் அப்புறப்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “கிடங்குகளில் உள்ள வீணான சாக்குகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்” என நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அமைச்சரின் உத்தரவையும் மீறி, கீழ்மட்ட அதிகாரிகள் காட்டும் இந்த அலட்சியத்தால் விவசாயிகளின் உழைப்பும், பொதுமக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!