ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ஷாபாத் மண்டலத்தில், போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் (35) என்ற நபர் பழிவாங்கும் நோக்கில், தனக்கு எதிராகப் புகார் அளித்த 17 வயது சிறுமி, அவரது தாய், பாட்டி மற்றும் தனது சொந்த மனைவி, 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 6 பேரை ஓரே இரவில் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ள இந்த கொடூரக் கொலைச் சம்பவம் குறித்து தெலங்கானா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தின் ஷாபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் பி. ராஜ்குமார் (35). இவர் கடந்த மே மாதத்தில் 17 வயதுடைய மைனர் சிறுமி ஒருவருக்குத் தொடர் பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமி மற்றும் அவரது தாயார் அளித்த புகாரின் பேரில், ஷாபாத் போலீசார் ராஜ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சமீபத்தில் அவர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
ஜாமீனில் வெளிவந்த ராஜ்குமார், தன் மீது புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தை பழிவாங்கக் கொடூரத் திட்டம் தீட்டியுள்ளார். நேற்று நள்ளிரவு 11:30 மணியளவில், முதலில் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற ராஜ்குமார், கதவைத் திறந்த சிறுமியின் 42 வயது தாயாரையும், தூங்கிக் கொண்டிருந்த 60 வயது பாட்டியையும் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், அங்கிருந்த 17 வயது சிறுமியைத் தனது காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்புணர்வு செய்து, கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு உடலை ஒரு ஏரிக்கரையின் அருகே வீசிச் சென்றுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு நள்ளிரவு 11:21 மணியளவில் திரும்பிய ராஜ்குமார், அங்குக் காழ்ப்புணர்ச்சியின் உச்சமாகத் தூங்கிக் கொண்டிருந்த தனது 31 வயது மனைவி சரிதா, 4 வயது மகன் மற்றும் 18 மாதக் குழந்தை (ஒன்றரை வயது) ஆகிய மூவரையும் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். ஓரே மணி நேரத்திற்குள் 6 உயிர்களைப் பறித்த ராஜ்குமார், உடனடியாகத் தனது தந்தைக்குப் போன் செய்து கொலையை ஒப்புக்கொண்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார். அவரது தந்தை அளித்த தகவலின் பேரில் சைபராபாத் போலீஸ் கமிஷனர் தருண் ஜோஷி மற்றும் டிசிபி யோகேஷ் கௌதம் ஆகியோர் சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
