கோவை : பொதுமக்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் போலீசில் புகார் அளிக்க “நிழல்” கியூ ஆர் கோடு கலெக்டர், எஸ்பி., அறிமுகம் செய்து வைத்து தொடங்கி வைத்தனர்.
பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தடுப்புக் காவல் நடவடிக்கைகளை மேம்படுத்தவும், அவசரகாலங்களில் காவல்துறையின் சேவையை விரைவாக பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கவும், தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கில், “நிழல் பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற கியூஆர் கோடு அடிப்படையிலான நவீன பொதுப் பாதுகாப்புத் திட்டத்தை, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் மாவட்ட எஸ்பி., பவன்குமார் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். இது குறித்து எஸ்பி., பவன்குமார் கூறியதாவது:
தமிழகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோவை மாவட்டத்தில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொதுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் புதிய அணுகுமுறைகள் அவசியமாகியுள்ளது.
அந்த தேவையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “நிழல்” திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தங்களது கைப்பேசியின் மூலம் கியூஆர் போடை ஸ்கேன் செய்து, காவல்துறையுடன் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி கோரலாம். அதோடு, தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் முக்கிய தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
இந்தத் திட்டத்தின் வாயிலாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை, சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள், சட்டவிரோதச் செயல்பாடுகள், பொது இடையூறுகள் மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள பிற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் விரைவாக தகவல் தெரிவிக்கலாம்.
குறிப்பாக, தகவல் அளிப்பவர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாக பாதுகாக்கப்படும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், கோவை மாவட்ட எஸ். பி., அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். அங்கு பணியாற்றும் பயிற்சி பெற்ற காவல்துறை அலுவலர்கள் பெறப்படும் தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் அவசர சேவைப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள், சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய பொதுமக்கள் கூடும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த கியூ ஆர் கோடு படிப்படியாக நிறுவப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கியூ ஆர் கோடு பயன்படுத்துவது எப்படி?
“நிழல்” கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ததும் அதில் வரும் லிங்கை திறக்க வேண்டும். திறந்தவுடன் கோவை மாவட்டம் காவல் உதவி, ஆங்கிலம், தமிழ் என வரும். அதில் வேண்டும் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.
பின்னர் பெயர், செல்போன் எண், பாலினம் ஆகியவை கேட்கப்படும். இவற்றை வேண்டும் என்றால் பதிவு செய்யலாம். பெயர், செல்போன் எண், பாலினம் ஆகியவற்றை பதிவு செய்யாமலும் புகாரை தெரிவிக்கலாம்.
இதனை தொடர்ந்து குற்ற புகார், குற்ற வகை, நிகழ்விடம், புகைப்படம், புகார் விவகரம் ஆகியவை பதிவு செய்தவுடன் கடைசியில் உள்ள புகாரை பதிவு செய்யவும் என உள்ளதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் உடனடியாக புகார் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்லும். அதேபோல அவசரத் தேவை என உள்ள கட்டத்தை தொட்டு செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனடியாக கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலிக்கும். போலீசார் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.
