Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

காப்பர் தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து தொழிலாளி பலி-9 பேர் படுகாயம்

சென்னை: கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் உள்ள காப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பர்னஸ் வெடித்து சிதறியதில் வடமாநில் தொழிலாளி தீயில் கருகி பரிதாபமாக பலியானார். மேலும், படுகாயமடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள காப்பர் உற்பத்தி மற்றும் இரும்பு உற்பத்தி தொழிற்சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

சிப்காட் ஒட்டியுள்ள பார்த்தபாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஜெயின் மெட்டல் காப்பர் தொழிற்சாலை சுமார் 5 வருடங்களாக இயங்கி வருகிறது. இங்கு, மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பயங்கர சத்தத்துடன் பர்னஸ் ஒன்று வெடித்து சிதறியது. இதில், சம்பவ இடத்திலேயே ஒரு தொழிலாளி உடல் கருகி பலியானார். உடன் வேலை செய்து வந்த 9 வடமாநில இளைஞர்கள் பலத்த காயமடைந்தனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனை, வெங்கடேஸ்வரா மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆகியவற்றில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கும்மிடிப்பூண்டி காவல்துறை டிஎஸ்பி சசிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில், தீயில் கருகி உயிரிழந்தவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவி ரஞ்சன் என தெரியவந்தது.

மேலும், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிம்பர்சிங் (24), பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பூசன் குமார் (25), ஓம் குமார் (22), ரஞ்சித் குமார் (35), ராஜா பாபு (26), ரன்வீர் குமார் (26), பிரின்ஸ் குமார் (27) உட்பட 8 பேர் படுகாயமடைந்தது தெரியவந்தது. மேலும், விமர்சிங் என்பவர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு தாக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!