தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்திரி மலையில் இருந்த ராமனைச் சந்தித்து உதவி கேட்கிறார். சுக்ரீவனுக்கு உதவ நினைத்தார் ராமர். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டால், தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், வாலியை மறைந்திருந்து வதம் செய்தார் ராமர்.
கீழே விழுந்த வாலி, ’மறைந்திருந்து என்னை வீழ்த்தி விட்டாயே ராமா..! கள்ள ஆண்டவனே!’ என்று கதறியபடியே உயிர்நீத்தார். ராமாயணத்தில் ’கிஷ்கிந்தை’ காண்டத்தில் வரும் இந்த வாலிவதம், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள மணக்கரை பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டி மணக்கரையில் ராமரின் நினைவாக கள்ளவாண்ட சுவாமி கோயிலை எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். ’கள்ள ஆண்டவர்’ என்ற பெயரே மருவி ‘கள்ளவாண்டர்’ என்றானதாம்.
இங்கிருந்து ’பிடிமண்’ எடுத்துச் சென்று சுற்று வட்டாரப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் கள்ளவாண்ட சுவாமி கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் மட்டுமே கள்ளவாண்ட சுவாமி கோயில்களைப் பார்க்க முடியும். வாலிவதம் திறந்தவெளியில் நடைபெற்றதால் இக்கோயில்களும் திறந்தவெளியிலேயே உள்ளன. தீராத்திகுளம் கிராமத்தில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலில் திருவிழா நடைபெற்றது.
வேட்டைப்பானை நிகழ்ச்சியைப் பார்க்க சுற்றுவட்டார கிராம மக்கள் தீராத்திகுளத்தில் குவிந்திருந்தனர். நள்ளிரவில் 12 மணிக்கு கோயிலின் முன்பு வரிசையாக 11 அடுப்புகள் வைக்கப்பட்டு, அதன் மேல் 11 பெரிய மண் பானைகள் வைக்கப்பட்டன.
பனையோலைகளைக் கொண்டு தீ மூட்டி பச்சரிசிக்கஞ்சி காய்ச்சினார்கள். கஞ்சி கொதித்த பிறகு வேட்டைப்பானை பூஜை நடந்தது. நையாண்டி மேளமும், உருமி மேளமும் வாசிக்கப்பட்டன. வில்லிசைப் பாடலில் கள்ளவாண்ட சுவாமியின் திருக்கதைத் தாளத்துடன் எடுத்துச் சொல்லப்பட்டது. கள்ளவாண்ட சுவாமிக்கு ஆடும் பக்தர்கள் அந்தக் கதையைக் கேட்டபடியே சுவாமி வந்து ஆடினார்கள். அருள்முற்றிய நிலையில் வேட்டைப்பானைகள் அருகில் சென்று தென்னம்பாளையை (தென்னை மரத்து பாளை) எடுத்து பானைக்குள் முக்கி எடுத்து அரிசிக்கஞ்சியை தலையில் ஊற்றினார்கள்.
காண்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்த காட்சி அது. மேளச்சத்தத்தை விட விண்ணை முட்டியது பெண்களின் குலவைச் சத்தம்.
