காவிரி மேலாண்மை ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், திறக்கப்படும் தண்ணீரை கர்நாடகாவே முறைகேடாக பாசனத்திற்கு பயன்படுத்துவதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு காரசாரமாக குற்றம்சாட்டியுள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வந்த சூழலில், தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்திற்கு நீர் வழங்குவதில் கர்நாடகாவுக்கு என்னதான் பிரச்னை என்று கேள்வி எழுப்பியதோடு, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுக அறிவுறுத்தியது. இதையடுத்து கடந்த 24ம் தேதி நடைபெற்ற 141வது ஒழுங்காற்று குழு கூட்டத்தில், ஆகஸ்ட் 25ம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டு, அதனை மேலாண்மை ஆணையமும் உறுதி செய்தது. இருப்பினும், வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வழங்காமல் ஆணையம் ஒருதலைபட்சமாக நீரின் அளவை குறைத்துவிட்டதாக சுட்டிக்காட்டிய தமிழக அரசு, நிலுவையில் உள்ள 17.6 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நிலை அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த மனுக்கள் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது அவர்கள், ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இரு மாநிலங்களுக்கும் நடுநிலையாக செயல்படாமல் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறது. ஆணையம் உத்தரவிட்ட வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீரைக்கூட கர்நாடகம் முறையாக திறந்துவிடவில்லை. தங்களது அணைகளில் 73 டிஎம்சி நீர் இருப்பில் உள்ளபோதிலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கின்றனர். மாறாக, காவிரியில் 20 டிஎம்சி நீரை சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து தங்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தியுள்ளனர். கர்நாடகம் தனது 22 சதவீத விவசாய நிலங்களுக்கு தண்ணீரை வழங்கிவிட்டு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதாக நாடகமாடுகிறது; இதனால் தமிழ்நாட்டில் சுமார் 24 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு கூட நீர் பாய்ச்ச முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே உடனடியாக ஆணையத்தை கூட்டி கூடுதல் நீர் திறக்க உத்தரவிட வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த கர்நாடக அரசின் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான், ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்ததை விட கூடுதல் தண்ணீரை திறந்துள்ளோம்; மாநிலத்தில் நிலவும் கடுமையான வறட்சி சூழல் தொடர்பான விவரங்களை ஆணையம் பரிசீலித்தே உத்தரவிட்டுள்ளது, அதை நாங்கள் பின்பற்றி வருகிறோம்’ என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கூடி உத்தரவுகளை பிறப்பிக்கும் நிலையில், அதில் நீதிமன்றம் தலையிடுவது சரியாக இருக்காது’ என்று கூறி வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். மேலும், அடுத்த விசாரணையின் போது தற்போதைய கள நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில அரசுகளும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதேபோன்று கர்நாடக அரசு திட்டமிடும் மேகதாது அணைக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசு தொடர்ந்துள்ள மனுவும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘மேகதாது அணை தொடர்பான சில முக்கிய வழிகாட்டுதல்கள் குறித்த கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால், கால அவகாசம் வழங்க வேண்டும்’ என்று கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேகதாது வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அரசு எடுத்து வரும் இந்த சட்டப் போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் டெல்டா விவசாயிகளிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
