நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் அதிவேகமாக வந்த கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில் நகரின் நண்பர்கோவில், மாமகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் காலை 7 மணிக்கு முன்பாகவே நாகர்கோவில் நகரப் பகுதியை கடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வரும் கனரக வாகனங்கள் பார்வதிபுரம் பகுதியில் இருந்து திரும்பி இரச்சகுளம் வழியாகச் செல்கின்றன. அதேபோல், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்களும் இரச்சகுளம் வழியாக பார்வதிபுரம் வந்து செல்கின்றன.
இந்த நிலையில், இன்று அதிகாலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. காலை 7 மணிக்குள் நாகர்கோவில் பகுதியைக் கடந்து செல்ல வேண்டும் என்ற நோக்கில், ஓட்டுநர் லாரியை அதிவேகமாக இயக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது நாகர்கோவில் கிருஷ்ணன்கோவில் பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரி சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது.
இதில் லாரி ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும், அங்கு வந்த போலீசாரும் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விபத்து நடந்த நேரத்தில் சாலையில் அதிகளவில் வாகனங்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் சென்று வரும் இந்த சாலையில் கனரக வாகனங்கள் அடிக்கடி அதிவேகமாக இயக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கனரக வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாட்டை முறையாக அமல்படுத்துவதுடன், இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது விபத்தில் சிக்கிய கண்டெய்னர் லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
