தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, நாமக்கல், விழுப்புரம், செங்கல்பட்டு, கரூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வரும் 12, 13 ஆகிய தேதிகளில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழையும், தென் கடலோர தமிழக மாவட்டங்கள், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழையும், வரும் 14ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தருமபுரி, திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு, சேலம், அரியலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க இன்று முதல் 15ஆம் தேதி வரை மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
