Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்டான்லி அரசு மருத்துவனையின் பிணவறையில் ரவுடிகளுக்கு அனுமதி- 4 பேர் கைது

சென்னை வியாசர்பாடியில் வசித்து வந்த பல் ஆனந்த் என்பவர், பின்னர் எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பு பகுதியில் வீடு மாற்றி வசித்து வந்ததாக கூறப்படுகிறது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், பல் ஆனந்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் சதீஷ்குமார் மற்றும்

தினேஷ்குமார் ஆகியோர் உயிரிழந்த பல் ஆனந்தின் உடலை பார்ப்பதற்காக ஸ்டான்லி மருத்துவமனை பிணவறைக்கு சென்றுள்ளனர்.

அப்போது இரவு நேர பணியில் நிரந்தர ஊழியரான சீனிவாசன் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு ஒரு கை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் இரவு நேர பணி மட்டும் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, கிரீன் பாய்ஸ் ஒப்பந்த பணியாளர் சங்கர் என்பவர் பல் ஆனந்தின் உடலை பிணவறைக்கு கொண்டு வந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது சதீஷ்குமார் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் பல் ஆனந்தின் உடலை பார்க்க வேண்டும் எனக் கூறி சங்கரிடம் ரூ.200 வழங்கியதாகவும், அந்த பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் இருவரையும் பிணவறைக்குள் அனுமதித்ததாகவும் புகார் எழுந்தது.

பிணவறைக்குள் சென்ற அவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த மற்றவர்களின் உடல்களையும் செல்போனில் வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக திருவொற்றியூர் பகுதியில் தலையில் சிதைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரதீப் ராஜ் உள்ளிட்டவர்களின் உடல்களையும் அவர்கள் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை விசாரித்தபோது, அவர்கள் பிரபல ரவுடிகள் என தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை ஆர்.எம்.ஓ. வனிதா மலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பிணவறை நிரந்தர ஊழியர் சீனிவாசன், கிரீன் பாய்ஸ் ஒப்பந்த பணியாளர் சங்கர் மற்றும் சதீஷ்குமார், தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் மற்றும் தினேஷ்குமாரின் மனைவிகள் மற்றும் உறவினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள H2 காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சீனிவாசனையும் கைது செய்ய வேண்டும் என்றும், அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் என்பதற்காக பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், சீனிவாசனின் அனுமதி இல்லாமல் ஒப்பந்த பணியாளர் பிணவறையை திறந்திருக்க முடியாது என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், ரவுடிகளின் உறவினர்களில் பெண் ஒருவர், பெண் காவல் ஆய்வாளர் லஞ்சம் கேட்டதாக குற்றம்சாட்டியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருசக்கர வாகனத்தில் இருந்து பணத்தை எடுத்து பத்திரிகையாளர்களிடம் அந்த பெண் காட்டிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டு குறித்து தனிப்பட்ட விசாரணை நடைபெற வேண்டியுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு மருத்துவமனை பிணவறையில் பணம் பெற்றுக்கொண்டு ரவுடிகளை உள்ளே அனுமதித்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பிரேதங்களை வீடியோ எடுத்ததாக எழுந்துள்ள இந்த சம்பவம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் குறித்த தகவல் பரவியதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு சம்பவம் குறித்து விசாரித்து பார்த்துச் சென்றதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

error: Content is protected !!