Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை…

குளித்தலை அருகே நகைக்காக மூதாட்டி கழுத்தறுத்து கொலை...

லாலாப்பேட்டையில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை – மர்ம நபருக்கு போலீசார் வலை; டிஐஜி, எஸ் பி ஆகியோ சம்பவ இடத்தில் விசாரணை.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்சியம் (60). திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தனது அக்கா குடும்பத்தினருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இளஞ்சியம் தனது குடும்பத்தினருடன் இணைந்து ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். தினமும் கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பொருட்களை சேகரிப்பதற்காக லாலாப்பேட்டை ரயில் நிலையம் அருகே உள்ள தோப்பு மற்றும் வாழைத்தோட்டப் பகுதிகளுக்குச் செல்வது வழக்கம்.

அதேபோல் நேற்று மாலை கால்நடைகளுக்கான தீவனத்தை சேகரிப்பதற்காக அப்பகுதிக்கு சென்ற இளஞ்சியம், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை மீண்டும் வாழைத்தோட்டப் பகுதிக்கு சென்று தேடியபோது, அங்கு ரத்தக்கறைகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அருகில் உள்ள புதர் பகுதிகளில் தேடியபோது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளஞ்சியத்தின் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து லாலாப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், இளஞ்சியம் அணிந்திருந்த தங்க மூக்குத்தி காணாமல் போயிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் மூக்குத்தியை பறிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் மர்ம நபர் அவரை கழுத்தறுத்து கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல டிஐஜி சிபி சக்கரவர்த்தி மற்றும் கரூர் மாவட்ட எஸ்.பி. ஹரிஹரன் பிரசாத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்துச் சென்ற மோப்பநாய் சிறிது தூரம் ஓடிய நிலையில், சந்தேக நபர் எவரையும் அடையாளம் காட்டவில்லை.

மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர் யார்?என்பது குறித்து லாலாப்பேட்டை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!