தாம்பரத்தில் முதியவரை மாடுகள் முட்டி, மிதித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், செம்பாக்கம், பவநந்தியார் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (72). இவர் வீட்டின் அருகே உள்ள மருந்தகத்துக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 2 மாடுகள் திடீரென ஆக்ரோஷமாக அவரை முட்டித் தாக்கின.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த லோகநாதனை, மாடுகள் தொடர்ந்து முட்டியதுடன், அவர் மீது ஏறி மிதித்ததாக கூறப்படுகிறது. மாடுகளின் தாக்குதலில் வலி தாங்க முடியாமல் லோகநாதன் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த குடும்பத்தினர், அவரை மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, முதியவரை மாடுகள் ஆக்ரோஷமாக முட்டித் தாக்கி, மிதிக்கும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய லோகநாதன் கூறுகையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து பாதுகாப்பான இடங்களில் அடைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளிலும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, உயிரிழப்பு நிகழ்வதற்கு முன்பாகவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
