Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அரிய அறுவை சிகிச்சைகள்- இருவர் உயிர் பிழைத்தனர்!

சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இரத்த நாள அறுவை சிகிச்சைத் துறை, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இரண்டு அரிய மற்றும் மிகவும் சிக்கலான இரத்த நாள அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இதில் 60 வயது ஆண் மற்றும் 19 வயது இளம்பெண் என இருவர் உயிர் காக்கப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய நவீன சிகிச்சைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக இந்த இரண்டு சிக்கலான அறுவை சிகிச்சைகளையும் இரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்களே முழுமையாக மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்த இரு நோயாளிகளுக்கும் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இருவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

60 வயது ஆணுக்கு பெருந்தமனி வீக்கத்திற்கு நவீன சிகிச்சை:

முதல் சிகிச்சையாக 60 வயதுடைய ஆண் ஒருவருக்கு இதயத்திலிருந்து உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய ரத்தக் குழாயான பெருந்தமனியின் வளைவுப் பகுதியில் (Aortic Arch) உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ரத்த நாள வீக்கம் (Aortic Arch Saccular Aneurysm) இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ரத்த நாள வீக்கம் வெடித்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்தது. மேலும், மூளைக்கும் இரு கைகளுக்கும் ரத்தம் கொண்டு செல்லும் மூன்று முக்கிய ரத்த நாளங்கள் பிரியும் பகுதியில் பாதிப்பு இருந்ததால் அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக இருந்தது.

ஏற்கெனவே வாய் புற்றுநோய்க்காக கதிர்வீச்சு சிகிச்சை பெற்றிருந்ததால் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட திசு மாற்றங்களும் அறுவை சிகிச்சையை மேலும் சிக்கலாக்கின.

இதையடுத்து மருத்துவர்கள் இரண்டு கட்டங்களாக நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். முதல் கட்டமாக மூளைக்கும் இரு கைகளுக்கும் ரத்தம் எடுத்துச் செல்லும் மூன்று முக்கிய ரத்த நாளங்களுக்கு மாற்றுப் பாதை அமைக்கும் வகையில் டாக்ரான் (Dacron) செயற்கை ரத்தக் குழாயைப் பயன்படுத்தி பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தொடர்ந்து இரண்டாம் கட்டமாக தொடைப் பகுதியில் உள்ள ரத்த நாளம் வழியாக நவீன வடிகுழாய் செலுத்தி, பெருந்தமனியின் உட்பகுதியில் பிரத்யேக ஸ்டென்ட் கிராஃப்ட் பொருத்தப்பட்டது. TEVAR எனப்படும் இந்த நவீன சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான ரத்த நாள வீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது அந்த நோயாளி நலமுடன் உள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைக்கு சுமார் ரூ.40 லட்சம் வரை செலவாகும் நிலையில், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

19 வயது இளம்பெண்ணுக்கு சிக்கலான ரத்த நாள அறுவை சிகிச்சை:

இரண்டாவது சிகிச்சையாக 19 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கு குடல்களுக்கு ரத்தம் வழங்கும் முக்கிய ரத்த நாளமான சுப்பீரியர் மெசென்டெரிக் ஆர்ட்டரியில் (Superior Mesenteric Artery) ரத்த நாள வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த ரத்த நாள வீக்கம் வெடித்தாலோ அல்லது அதில் ரத்த உறைவு ஏற்பட்டாலோ குடல்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு, குடல் திசுக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது.

மேலும், இந்த ரத்த நாள வீக்கம் உடலின் மிக முக்கியமான பெரிய ரத்தக் குழாயான இன்ஃபீரியர் வேனா கேவா (Inferior Vena Cava – IVC) உடன் நெருக்கமாக ஒட்டியிருந்ததால் அறுவை சிகிச்சை மிகவும் சவாலானதாக அமைந்தது.

இதையடுத்து மருத்துவக் குழுவினர் வயிற்றுப் பகுதியைத் திறந்து (Laparotomy), மிகுந்த கவனத்துடன் பாதிக்கப்பட்ட ரத்த நாள வீக்கத்தை வெற்றிகரமாக அகற்றினர். சிக்கலான இந்த அறுவை சிகிச்சைக்குப் பின்னர் இளம்பெண்ணும் நலமுடன் குணமடைந்தார்.

இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் (CMCHIS) கீழ் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.

அறுவை சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவக் குழுவினர்:

இந்த இரண்டு அரிய அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்ட இரத்த நாள அறுவை சிகிச்சைக் குழுவில் பேராசிரியர் டாக்டர் க. இளஞ்சேரலாதன், உதவிப் பேராசிரியர்கள் டாக்டர் V. ராதாகிருஷ்ணா, டாக்டர் V.G. விக்ரமன் ஆகியோர் இடம்பெற்றனர்.

மேலும், மயக்கவியல் துறை பேராசிரியர்கள் டாக்டர் V.J. கார்த்திக், டாக்டர் பத்மினி, இதய மற்றும் மார்பக அறுவை சிகிச்சைத் துறை பேராசிரியர் டாக்டர் K.S. சரவணகிருஷ்ணராஜா, அறுவை சிகிச்சை இரைப்பை மற்றும் குடலியல் துறை பேராசிரியர் டாக்டர் L. ஆனந்த் ஆகியோர் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினர்.

மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு:

இந்த மருத்துவச் சாதனையை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) பேராசிரியர் டாக்டர் S. ஜோதிகுமார் மற்றும் நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் B. வனிதா மலர் ஆகியோர் பாராட்டினர். மேலும், இந்த அறுவை சிகிச்சைகளில் பங்கேற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

அரசு மருத்துவமனைகளிலும் நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் திறமையான மருத்துவக் குழுவினரின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் உயிருக்கு ஆபத்தான மிகவும் சிக்கலான நோய்களுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.

பொருளாதார வசதி இல்லாத ஏழை, எளிய மக்களும் பல லட்சம் ரூபாய் செலவாகக்கூடிய நவீன மருத்துவச் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற முடியும் என்பதை ஸ்டான்லி மருத்துவமனையின் இந்தச் சாதனை மீண்டும் நிரூபித்துள்ளது. இதுகுறித்து இரத்த நாள அறுவை சிகிச்சைப் பிரிவு பேராசிரியர் டாக்டர் க. இளஞ்சேரலாதன் தெரிவித்தார்.

error: Content is protected !!
Secret Link