Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை: இந்தூரில் 12 வயது சிறுவனை ஸ்டிரெச்சரில் தள்ளிய பெற்றோர்

மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் இந்தூரில் உள்ள எம்.ஒய். அரசு மருத்துவமனையில் 12 வயதான ஆதர்ஷ் என்ற சிறுவன் முதுகு தண்டுவட பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள உயர் சிறப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து சிறுவனின் பெற்றோர் ஆம்புலன்ஸ் வாகனத்தை தேடி அலைந்துள்ளனர். ஆனால் அவர்களது மகனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த பெற்றோர் தங்கள் மகனை ஸ்டிரெச்சர் ஒன்றில் வைத்து தள்ளிக்கொண்டே மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்தனர்.

அவர்களோடு மருத்துவ ஊழியர்கள் யாரும் உடன் வரவில்லை. கடும் வெயில் அந்த சிறுவனின் தந்தை ஸ்டிரெச்சரை சாலையில் இழுத்துச் சென்றார். பின்னால் சென்ற சிறுவனின் தாய், வெயிலில் இருந்து மகனை பாதுகாக்க தனது சேலையின் நுனியை தண்ணீரில் நனைத்து சிறுவனின் முகத்தில் போர்த்தியவாறு வந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து அவர்கள் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு மகனை கொண்டு சென்று அங்கிருந்த டாக்டர்களிடம் காட்டியபோது, அவர்கள் சிறுவனை சோதித்துவிட்டு மீண்டும் எம்.ஒய். மருத்துவமனைக்கே கொண்டு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இந்த முறையும் அவர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால், அந்த பெற்றோர் மீண்டும் தனது மகனை ஸ்டிரெச்சரில் வைத்து எம்.ஒய். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.ஒய். மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!