அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ரத்னசாமி தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ் பா. சாஸ்திரி முன்னிலையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முகவர்களுடன் கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான இரத்னசாமி, தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி/ பேரூராட்சிப் பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது. கிராமப்புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும் நேர்வில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்று அவ்விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் விளம்பரம் செய்யலாம் என்று கூறினார். மேலும்
தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்தவும், வாகனங்களை உபயோகிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 15.03.2026 இன்று முதல் அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் (3 X 3) 9 பறக்கும் படை குழுக்களும் மற்றும் (3 X 3) 9 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது 24 மணி நேரமும் இயங்கும். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000 க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும்.
இத்தேர்தல் பணியில் 4,500 அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், தேர்தல் குறித்து புகார் தெரிவிக்க இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள C-Vigil App செயலியிலும் புகார் தெரிவிக்கலாம். இந்த செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேர்தல் தொடர்பான புகார்கள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை எண் 1800-599-4401 மற்றும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணினை பயன்படுத்தி புகார்கள் அளிக்கலாம்.
வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன் மொழிபவர்களில் ஒருவர், அறிவிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஆகியோரின் அலுவலகங்களில்

30.03.2026 முதல் (அரசாங்க விடுமுறையில்லாத) ஒரு தினத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் 06.04.2026 (திங்கள் கிழமை) ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் போது 100 மீட்டருக்குள் 3 வாகனங்களும், வேட்பாளரோடு சேர்த்து 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வேட்பு மனுக்கள் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களில் 07.04.2026 ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணிக்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர் அல்லது வேட்பாளரால் எழுத்து மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அவரது தேர்தல் முகவர் வேட்பாளர் விலகல் அறிவிப்பை மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் எவரிடத்திலேனும் அவரது அலுவலகத்தில் 09.04.2026 ஆம் தேதியன்று (வியாழக்கிழமை) மாலை 03.00 மணிக்குள் கொடுக்கலாம்.
தேர்தலில் போட்டியிருந்தால் 23.04.2026 (வியாழக்கிழமை) ஆம் தேதியன்று காலை 07.00 மணி முதல் மாலை 06.00 மணி வரையில் வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியர் மாநாடு இரத்தினசாமி தெரிவித்தார்.
கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் முகவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
