தெலுங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரை சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இவர்களுக்கு கீதான்ஸ்ரீ (4), கீதான்விகா(4) என்ற இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்ததை காரணம் காட்டி ஸ்ரீசைலம் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மதியம் குழந்தைகளை விவசாய நிலத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி ஸ்ரீசைலம் வீட்டிலிருந்து வெளியேறினார். நீண்ட நேரமாகியும் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மவுனிகா அங்கு சென்றார். அப்போது குழந்தைகள் குறித்து கேட்டபோது, விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்ததாக அவர் கூறினார்.
இதனையடுத்து சந்தேகமடைந்த கிராம மக்கள், அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் தேடி குழந்தைகளின் உடல்களை மீட்டனர்.
போலீஸ் விசாரணையில், “ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசையால், குழந்தைகளை கொன்று விட்டால் மனைவி விவாகரத்து கொடுத்து விடுவார்” என்ற எண்ணத்தில் குழந்தைகளை கிணற்றில் தள்ளி இந்த கொடூரச் செயலை செய்ததாக ஸ்ரீசைலம் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
