Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விராலிமலை அருகே பள்ளி மாணவர்களை வைத்து வேலை-தலைமை ஆசிரியர் மீது புகார்

பள்ளி மாணவர்களை துப்புரவு பணி செய்ய வைத்த தலைமை ஆசிரியர்

தலைமை ஆசிரியை மீது அடுக்கடுக்கான புகார்கள்: விராலிமலை அருகே கிராம மக்கள் மற்றும் நாட்டாமை குற்றச்சாட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், லஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வரும் திருமதி. கௌசல்யா சரோஜினி என்பவர் மீது, அந்த ஊரின் நாட்டாமை மற்றும் பொதுமக்கள் பல்வேறு அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

அப்பள்ளி தலைமை ஆசிரியை மீது ஊர் நாட்டாமை. அழகர்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து முன்வைத்துள்ள 10 முக்கியப் புகார்கள் இதோ:

1. காலதாமதம் மற்றும் மாணவர்களைக் காத்திருக்க வைத்தல்:

தலைமை ஆசிரியை பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு வருவதில்லை என்றும், காலை வழிபாட்டுக் கூட்டத்தின் போது அவர் வரும் வரை மாணவர்களை வெளியிலேயே காத்திருக்க வைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

2. மதமாற்ற முயற்சி:

ஆசிரியை தான் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி மாணவர்களிடம் பேசி, அவர்களை மதம் மாற்ற முயற்சி செய்ததாகப் புகார் எழுப்பப்பட்டுள்ளது.

3. எச்சில் பாத்திரங்களைக் கழுவ வைத்தல்:

தான் சாப்பிட்ட மிச்ச உணவை (எச்சிலை) மாணவர்களைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதாகவும், தான் சாப்பிட்ட எச்சில் பாத்திரங்களை மாணவர்களைக் கொண்டே கழுவச் செய்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

4. சாதியப் பாகுபாடு:

மாணவர்களிடையே ஜாதிப் பெயரைச் சொல்லிப் பேசி, சாதியப் பிரிவினையைத் தூண்டும் வகையில் நடந்துகொள்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

5. பள்ளி கட்டுமானப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல்:

பள்ளியில் உடைந்து போன திண்ணையைப் பூசுவதற்காக, மாணவர்களை ஆற்றுப் படுகைக்கு அனுப்பி மணல் எடுத்து வரச் சொல்லி, சிமெண்ட் கலவையை அவர்களையே கொண்டு பூச வைத்துள்ளார்.

6. தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ய வைத்தல்:

பள்ளியின் தரைத்தளம் மற்றும் மேல்நிலைத் தண்ணீர் தொட்டிகளை மாணவர்களைக் கொண்டே ஆசிரியை சுத்தம் செய்ய வைத்துள்ளார்.

7. தகாத வார்த்தைகளால் திட்டுதல்:

மாணவர்களைப் பள்ளி வளாகத்தில் மிக மோசமான, கெட்ட வார்த்தைகளால் திட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகப் புகார் கூறப்பட்டுள்ளது.

8. அரசுப் புத்தகங்களை எடைக்குப் போடுதல்:

அரசாங்கத்தால் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களை, பருவம் முடிந்தவுடன் மாணவர்களிடமிருந்து திரும்பப் பெற்று, அவற்றை எடைக்கு (பழைய பேப்பர் கடைக்கு) விற்றுள்ளார். 

9. விளையாட்டுப் பொருட்களைத் தராமல் மறைத்தல்:

மாணவர்கள் விளையாடுவதற்காக அரசு வழங்கிய விளையாட்டுப் பொருட்களை மாணவர்களுக்குத் தராமல், கேட்டால் “இல்லை” என்று கூறி மறைப்பதாக ஊர்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

10.சகஆசிரியர்களுக்குச் சலுகை:

தவறுகளைத் தட்டிக்கேட்காமல் இருப்பதற்காக, தனக்குச் சாதகமான சில ஆசிரியர்களை மட்டும் பள்ளிக்குத் தாமதமாக வரவும், பள்ளி முடிவதற்கு முன்பே சீக்கிரமாகச் செல்லவும் அவர் அனுமதிப்பதாகக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம மக்களின் கோரிக்கை:

இத்தனை முறைகேடுகளிலும், விதிமீறல்களிலும் ஈடுபட்டு வரும் இந்தத் தலைமை ஆசிரியரை உடனடியாக இப்பள்ளியை விட்டு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது உரிய துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊர் நாட்டாமை அழகர்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கல்வித் துறைக்குக் கோரிக்கை விடுத்து வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!