Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

“நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் அத்தியாயத்திலிருந்து!” – சி.விஜயபாஸ்கரின் உருக்கமான அறிக்கை

அதிமுகவின் முக்கிய முகங்களில் ஒருவரும், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுவதாக இன்று (16.06.2026) அதிரடியாக அறிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக அதிமுக தொண்டர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும், கழக அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்த சி.விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
35 ஆண்டுக்கால விசுவாசம்:
“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், ‘அம்மா’ என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாக, இரண்டாவது தலைமுறையாக என் வாழ்க்கையை இந்த இயக்கத்திற்காக அர்ப்பணித்தவன் நான். எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், அடையாளமும், வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும். மாணவர் அணியில் தொடங்கிய என் பயணம், தேர்தல் களங்கள் என என்னை ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக வழிநடத்தியது.
அம்மா (ஜெயலலிதா) வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்லாமல், என் பாக்கியமாகவும் பெரும் வரமாகவும் கருதினேன்.
தலைமை மீது மறைமுகக் குற்றச்சாட்டு:
ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தைத் தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.
எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.
நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்திலிருந்து. வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்” என்று டாக்டர் சி.விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் மிகவும் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் பரபரப்பு:
அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும், அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளும் விவாதப் பொருளாக மாறியுள்ள தற்போதைய அரசியல் சூழலில், கட்சியின் மிக முக்கியத் தூணாக விளங்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் இந்த விலகல் முடிவு, அதிமுக தலைமைக்கு விழுந்த பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!