தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “2026 – 27 இல் நிதி மேலாண்மை பாதையை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இடைக்கால அறிக்கையை விட உங்கள் அரசில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சொந்த வரி வருவாய் ரூ.2,839 கோடி குறைந்துவிட்டது. தமிழகத்திற்கான நிதியை பெறமத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மட்டும் போதாது, பேச வேண்டும். பேசாமல் செயல்படுவோம் என்பது வரவேற்கதக்கது. ஆனால் சில இடங்களில் பேசினால்தான் தீர்வு காண முடியும். தவெக ஆட்சி பொறுப்பேற்ற 3 மாதத்தில் ரூ.20,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும். பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 100% பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்க. உழவன் செயலி திட்டத்தை தொடர வேண்டும். ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தொழில்வளர்ச்சியில் முன்னேற வேண்டும் என்றால் விமான நிலையங்கள் அவசியம் வேண்டும்.
குறிப்பிட்ட கிலோமீட்டர்களையும், ஆண்டுகளையும் கடந்த பழைய பேருந்துகள்தான் இப்போது ஓடிக் கொண்டிருக்கின்றன. அவற்றை முழுமையாக ஏ.சி பேருந்தாக மாற்றுவதற்கெல்லாம் 100% வாய்ப்பு இல்லை. தவெக அரசின் சாதனையே குதிரை பேரம் தான். சாதாரண பேருந்துகளை மாற்றி கொடுத்தாலே மக்கள் பராட்டுவார்கள். ஆனால் இந்த ஆண்டு 1000 பேருந்துகள் வாங்குவோம் என்று சொல்லியுள்ளீர்கள். இந்த ஆண்டு முடிந்துவிட்டது. 4 ஆண்டுகளில் எத்தனை பேருந்துகள் வாங்கப் போகிறீர்கள். இயலாத காரியம். அதிமுக ஆட்சியிலும் திமுக ஆட்சியிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டின் கடன்சுமை ரூ.13 லட்சம் கோடியாக உள்ளது. வரலாறு காணாத அளவில் வருவாய் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தின் வட்டி சுமை அதிகமாகிவிட்டது. பட்ஜெட்டில் நிதி மேலாண்மையை சரி செய்யும் திட்டங்களில்லை. ஓய்வூதிய திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
